Published : 23 Mar 2023 07:28 AM
Last Updated : 23 Mar 2023 07:28 AM

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.4,411 கோடிக்கு ஒப்புதல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா
ரெட்டி நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில்செய்தியாளர்களிடம் கூறியதாவது, "2023-24-ம் நிதியாண்டுக்கான திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ. 4411.68 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதியே அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ஆந்திராவில் மேலவை தேர்தல் நடைமுறைகள் காரணமாக தேவஸ்தான பட்ஜெட் குறித்து அறிவிக்க இயலவில்லை.
வரும் நிதியாண்டில் ரூ. 5.25 கோடியில் 30 லட்டு பிரசாத விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். உளுந்துார் பேட்டையில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலுக்கு
ரூ. 4.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடைபிடிக்கப்படும் விஐபி பிரேக் தரிசன நேரமே இனி வரும் நாட்களிலும் தொடரும். இதன் மூலம் சாமானிய பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை குறைத்துக் கொண்டதால் சாமானிய பக்தர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது

ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ஆண்டுக்கு 1,200 கோடியிலிருந்து ரூ. 1,500 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் நிதியாண்டில் இது ரூ.1,700 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சுப்பா ரெட்டி கூறினார். நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, தலைமை பொறியாளர் ஜெகதீஷ்வர் ரெட்டி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x