Published : 23 Mar 2023 06:05 AM
Last Updated : 23 Mar 2023 06:05 AM
“இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும் நாடாக மட்டுமே இருந் தது. ஆனால், இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அலுவலகம் மற்றும் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது: 5ஜி தொழில்நுட்பத்தை மிக வேகமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
125 நகரங்களில் 5ஜி : அறிமுகப்படுத்தப்பட்ட 120 நாட்களில் 125 நகரங்களுக்கு 5ஜி சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் 6ஜி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தொலைத்தொடர்பு துறையில் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. 4ஜி அறிமுகத்துக்கு முன்புவரையில் இந்தியா தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அத்தொழில்நுட்ப ஏற்றுமதியில் பெரிய நாடாக உருவெடுத்து வருகிறது. விரைவில், 5ஜி மேம்பாடு தொடர்பாக 100 புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆய்வகங்கள் இந்தியாவுக்கான 5ஜி பயன்பாடுகளை மேம்படுத்தும்.
85 கோடி பேர்.. இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத் தன்மைமிக்க தாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. 2014-ல் இந்தியாவில் இணையத்தைப் பயனபடுத்தும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. தற்போது அது 85 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்களை இணைய வசதி சிறப்பாக சென்றடைந்துள்ளது. இந்தியாவில் இணையத்துக்கான கட்டணம் மிகக் குறைவு. ஸ்மார்ட் போன்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவே இந்தியாபெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது அதிகாரத்துக்கானதாக இல்லாமல், அனைவரையும் உள்ளடக்கி மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பான திட்ட ஆவணங்களையும் நேற்று அவர் வெளியிட்டார். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியமானது ஐ.நா. தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு அமைப்பு ஆகும். இதற்கான அலுவலகத்தை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 5ஜி: சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் 5ஜி தொழில்நுட்பம் மிகப் பெரும் மாற்றத்தைகொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT