Published : 23 Mar 2023 11:42 AM
Last Updated : 23 Mar 2023 11:42 AM
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல்நடந்துள்ளதாகக் கூறி டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்தமாதம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அவரை சிபிஐ காவலில் வைத்து மார்ச் 4-ம் தேதி வரை விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் சிபிஐ காவல் 2-வது முறையாக மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 6-ம் தேதி சிபிஐ காவல் முடிந்ததும், மணிஷ் சிசோடியாவுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திஹார் சிறையில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி விசாரணை நடத்தினர். அதற்கு 2 நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.
இதனிடையே, திஹார் சிறையில் கடந்த 9-ம் தேதி மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ்அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவுக்கு ஏப்ரல் 5-ம் தேதி வரைநீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சிபிஐ அதிகாரிகள் கோரிக்கையின்படி, சிசோடியாவின் நீதிமன்ற காவலை 14 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 3 வரை(சிபிஐ தொடர்ந்த வழக்கு) நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment