Published : 22 Mar 2023 06:05 PM
Last Updated : 22 Mar 2023 06:05 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ''ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்படும் வரை சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எனது இந்த முடிவு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், எனக்கு இது உணர்வுபூர்வமானது. சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்படாதவரை நான் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
நான் இதற்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற போதெல்லாம், ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனம், இந்திய அரசியல் சாசனம் இரண்டின் கீழும்தான் நான் பதவியேற்றேன். ஜம்மு காஷ்மீர் கொடி மற்றும் இந்திய தேசியக் கொடி இரண்டும் இருக்க நான் பதவியேற்றேன். இவ்வாறு இல்லாத ஒரு சூழலில் சட்டப்பேரவை உறுப்பினராக பதிவியேற்க என்னால் இயலாது. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக பூஞ்ச் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முஃப்தி, ''ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பாக நான் என்ன கூற முடியும்? ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. ஆனால், பாஜகவுக்கு உகந்த சூழல் ஏற்பட்டால் மட்டுமே தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும்'' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT