Published : 22 Mar 2023 05:28 AM
Last Updated : 22 Mar 2023 05:28 AM

டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் - இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

புதுடெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு பதிலாக நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.

இதனிடையே டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், "நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் டெல்லி பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்காக டெல்லி மக்கள் வருத்தப்படுகின்றனர்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்யவுள்ளார்.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கைலாஷ் நேற்று பேசும்போது, “டெல்லி பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 10-ம்தேதியே அனுப்பிவிட்டோம். இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

கடைசி நேரத்தில்...: மார்ச் 17-ம் தேதி சில காரணங்களுக்காக மத்திய அரசு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தர மறுத்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், தலைமைச் செயலர் கடந்த 3 நாட்களாக இந்தக் கடிதத்தை மறைத்து வைத்திருந்தார்.

நேற்று பிற்பகல் 2 மணிக்குத்தான் இந்தக் கடிதத்தைப் பார்த்தேன். அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை 6 மணிக்குத்தான் இந்தக் கடிதத்தை என்னிடம் தந்தனர்.

இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், கடைசி நேரத்தில்தான் இந்த விவரம் எனக்குத் தெரிய வந்தது. டெல்லியின் பட்ஜெட்டை தாமதப்படுத்தியதில் டெல்லியின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதிச் செயலாளரின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்

உள்துறை அமைச்சகம் விளக்கம்: பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள மூலதனச் செலவினப் பற்றாக்குறை, மானிய திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் திட்டங்களை டெல்லி மாநில அரசு செயல்படுத்தாதது ஏன், தகவல் மற்றும் விளம்பரத்துறை சார்பில் ரூ.500 கோடி செலவிடுவது ஏன் என்பது போன்ற கேள்விகளை டெல்லி அரசிடம், உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. அதற்கான பதில் கிடைத்ததும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x