Published : 21 Mar 2023 05:55 PM
Last Updated : 21 Mar 2023 05:55 PM

என்னைக் களங்கப்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மக்களவையில் பதிலளிக்க அனுமதிப்பீர்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: தன்னைக் களங்கப்படுத்தும் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மக்களவையில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ''மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்கிறேன்.

நாடாளுமன்ற நடைமுறையின் கீழ் உள்ள சட்டப்பிரிவு 357, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குகிறது. சபாநாயகரின் அனுமதியுடன் இந்த சட்டப்பிரிவின் கீழ் உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க முடியும்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு சூழலில் சட்டப்பிரிவு 357ன் கீழ் தன்னிலை விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நாடாளுமன்றம், பத்திரிகை, நிதித்துறை ஆகியவை ஜனநாயகத்துடன் செயல்படுவதற்கு ஏற்ப அமைப்பு ரீதியான சட்டத்தின் தேவை இந்தியாவில் இருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

லண்டனில் நடைபெற்ற மற்றொரு கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, பத்திரிகை, நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வழியில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி இருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அடிப்படைவாத அமைப்பு என குற்றம்சாட்டி இருந்த ராகுல் காந்தி, அந்த அமைப்பு ஏறக்குறைய நாட்டின் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, தனது பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்தி வருகிறது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தை செயல்பட விட மாட்டோம் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x