Published : 21 Mar 2023 04:49 PM
Last Updated : 21 Mar 2023 04:49 PM

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023 -2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளிகளால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிகளுக்கு இடையேயான அமளிகளால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கியது முதல் முடக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நாள் முழுவதுமான முடக்கத்திற்கு பின்னர் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய மக்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மதியம் மக்களவை எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் மீண்டும் கூடியது. அப்போது அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால், பாஜகவின் ஜூகல் கிஷோர் சர்மாவிடம் மத்திய ஜம்மு காஷ்மீர் யூனியனுக்கான பட்ஜெட்டை தாக்கலுக்கான நடைமுறைகளைத் தொடங்க கோரினார். சர்மா ஒரு நிமிடம் பேசிய பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கான நடைமுறைத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அமளிகளுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீருக்கான, ரூ.1.11 லட்சம் கோடி பட்ஜெட் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால் முழங்கள் எழுப்பிய உறுப்பினர்களிடம் இன்னும் சில அலுவல்கள் நடைபெற ஒத்துழைத்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனாலும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காலையில் உறுப்பினர் ராம் சக்காலுக்கான பிறந்த நாள் வாழ்த்துடன் இன்றைய மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி விதி 267-ன் கீழ் 11 நோட்டீஸ்கள் அவைத் தலைவருக்கு வழங்கப்பட்டன. நாம் நமது வழக்கமான அலுவல்களில் பங்கேற்று விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அவைத் லைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். இருந்தும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் மாநிலங்களவைக் கூடியதும் உறுப்பினர்களின் முழக்கங்கள் தொடர்ந்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி ஏன் மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவை மார்ச் 23-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் அங்கு இருந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், அதே கோரிக்கையை வலியுறுத்தும் மிகப் பெரிய பேனரை கீழே தொங்கவிட்டபடியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

யுகாதி, குடி பவா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அவை மீண்டும் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x