Last Updated : 21 Mar, 2023 05:04 AM

3  

Published : 21 Mar 2023 05:04 AM
Last Updated : 21 Mar 2023 05:04 AM

கர்நாடகா | காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை - ராகுல் காந்தி வாக்குறுதி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்க‌ளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேற்று பெலகாவியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''கர்நாடக பாஜக ஆட்சி நாட்டிலேயே ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. எல்லா துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளும் ஏழைகளும் பெண்களும் பாஜக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பட்டியலினத்தவரும், சிறுபான்மையினரும் பாஜக ஆட்சியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருப்பதால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது'' என்றார்.

பின்னர் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட போது ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல காலியாக உள்ள 2.5 லட்சம் அரசு வேலைகளை உடனடியாக நிரப்ப உள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதேபோல டிப்ளமோ, பாலிடெக்னிக் படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரருக்கு ‘அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல அனைத்து குடும்பத்தினருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x