Last Updated : 14 Sep, 2017 12:06 PM

 

Published : 14 Sep 2017 12:06 PM
Last Updated : 14 Sep 2017 12:06 PM

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி, அபே அடிக்கல் நாட்டினர்

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை இந்தியப் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இன்று அகமதாபாத்தில் நாட்டினர்.

அகமதாபாத்-மும்பை இடையேயான அதிவேக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி அகமதாபாத் சபர்மதி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, புல்லட் ரயில் என்பது “புதிய இந்தியாவின் குறியீடு” என்றார். போக்குவரத்துதான் நாட்டின் எதிர்காலம் என்பதால் அதிவேக இணைப்பு உள்கட்டமைப்புகள் தேவை என்பதை வலியுறுத்தினார் மோடி.

“அடுத்த தலைமுறை பொருளாதார வளர்ச்சியில் அதிவேக ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கும். இதன் மூலம் பலதரப்பு வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார் மோடி.

ஜப்பான் பிரதமர் அபே கூறும்போது, “இன்னும் சில ஆண்டுகளில் நான் இந்தியாவுக்கு வரும்போது புல்லட் ரயில் ஜன்னல் வழியாக இந்தியாவின் அழகை ரசிக்க விரும்புகிறேன்” என்றார்.

508 கிமீ புல்லட் ரயில் திட்டத்துக்கு மொத்த செலவு ரூ.1,08,000 கோடியாகும், இதில் 81% தொகையை 0.1% வட்டிக்கு ஜப்பான் இந்தியாவுக்கு வழங்குகிறது. 50 ஆண்டுகளில் இந்த ரூ.88,000 கோடி தொகையை திருப்பி செலுத்தினால் போதுமானது.

குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் உள்கட்டமைப்புத் திட்டத்துக்கான கடன் இவ்வளவு சாதகமான நிலையில் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அதாவது ஏற்கெனவே இருக்கும் நிதிநிலவரங்களுக்குத் தொந்தரவு அளிக்காமல் 81% தொகை கடனாக அளிக்க ஜப்பான் மனமுவந்துள்ளதை குஜராத் அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

திட்டத்தின் சோதனை ஓட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தம் டிசம்பர் 2023-லிருந்து ஆகஸ்ட் 2022க்கு முன்நகர்த்தப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் இரண்டு மாநிலங்கள் வழியாகச் செல்லும். மகாராஷ்டிராவில் 155.64 கிமீ குஜராத்தில் 350,53 கிமீ. இரட்டை இரட்டைவழித்தடமான இது 21 கிமீ சுரங்கப்பாதையில் செல்லும். மும்பை தானே பகுதியில் 7 கிமீ கடலுக்கு அடியில் குகைப்பாதையில் செல்லும்.

மும்பை சுரங்க ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி 12 ரயில் நிலையங்கள் இதன் பாதையில் உள்ளன. தானே, விரார், பாய்சர், வாபி, பிலிமோரா, சூரத். பரூச்,வதோதரா, ஆனந்த், அகமதாபாத் சபர்மதி ரயில் நிலையங்கள் மேலே செல்லும்.

அதிவேக ரயில் பயிற்சி நிலையம் ஒன்று வதோதராவில் உருவாகி வருகிறது, இது 2020-ம் ஆண்டு இறுதியில் முழுவீச்சுடன் செயல்படத் தொடங்கும். சுமார் 4,000 பேர் இதில் பயிற்சி பெறுவார்கள், இவர்கள்தான் அதிவேக ரயில் போக்குவரத்துக்கு பொறுப்பு.

மத்திய அரசின் புல்லட் ரயில் திட்டத்தினால் பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டமும் புதிய வகையில் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அதிவேக ரயில்களுக்குத் தேவையான பாலங்கள், உபகரணங்கள் உட்பட ஏகப்பட்ட பொருட்களை இங்கு உற்பத்தி செய்தாக வேண்டும்.

இந்த புல்லட் ரயில் திட்டத்தின் உருவாக்கக் கட்டத்தில் சுமார் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று குஜராத் அரசு அறிக்கை கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x