Published : 20 Mar 2023 12:25 PM
Last Updated : 20 Mar 2023 12:25 PM

அதானி விவகாரத்தால் மீண்டும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அமளி காரணமாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச் 20) காலையில் மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர், "நான் அவையை நடத்த வேண்டும் என்று விரும்பினால் நான் அவையை நடத்துகிறேன். இல்லையென்றால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படும்'' என்றார். இருந்தும் அவையில் அமளி நீடித்ததால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா, எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியினர் தனது அறையில் சந்தித்து நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவையும் இன்று காலை, 11 மணிக்கு தொடங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட, விதி 267ன் கீழ் பல்வேறு நோட்டீஸ்கள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 நோட்டீஸ்களில் 9 காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. அனைத்து நோட்டீஸ்களும் நிராகரிக்கப்படுகிறது என்று அவைத்தலைவர் தெரிவித்தார்.

அதானி குழுமங்கள் குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேநேரத்தில், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி லண்டனில் பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி வலியுறுத்தி வருகின்றது. இந்த இரண்டு விவகாரங்களால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இந்த முடக்கம் இரண்டாவது வாரமாக இன்றும் தொடர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x