Published : 20 Mar 2023 08:03 AM
Last Updated : 20 Mar 2023 08:03 AM
புதுடெல்லி: நாட்டில் எச்3என்2 காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி அப் பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் அனுபம் சிபில் கூறியதாவது:
எச்3என்2 காய்ச்சல் அறிகுறிகள், கரோனா போல்தான் இருக்கும். இருமல், சளி, காய்ச்சல்தான் இதன் அறிகுறிகள். ஆனால் நீண்ட காலத்துக்கு இருக்கும். இதனால் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற சூழலில் முன்னெச்சரிக்கை அவசியம். கரோனா காலத்தில் பின்பற்றிய தடுப்பு நடவடிக்கைகளை நாம் இப்போதும் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அவரிடம் இருந்து விலகியிருப்பது மிக முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிபல் கூறுகையில், ‘‘இந்த தொற்றுக்கு எதிராக குழந்தைகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கக் கூடாது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தம், நல்ல உணவு பழக்கவழக்கங்கள் மூலம் நாம் இந்த தொற்று பாதிப்பில் இருந்து விலகியிருக்க முடியும். குழந்தைகளை முக கவசத்துடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.
மூளை பாதிப்பு ஏற்படலாம்
நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆதித்யா பதி கூறுகையில், ‘‘எச்3என்2 வைரஸ் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். குறிப்பாக மூளையில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது போன்ற பாதிப்பு ஏற்படும்நபர்கள் அதிகம் இல்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல உணவு பழக்கம், நடைபயிற்சி போன்றவை அவசியம்’’ என்றார்.
தினசரி கரோனா தொற்று 1,071 ஆக உயர்வு
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1,071 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 129 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,802 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,915 ஆக அதிகரித்துள்ளது. 98.8 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 1.19 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT