Published : 19 Mar 2023 11:49 AM
Last Updated : 19 Mar 2023 11:49 AM
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட ரூ.8,480 கோடி செலவிலான பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் விமர்சனம் எழுந்துள்ளது.
பெங்களூரு - மைசூரு இடையேயான 118 கி.மீ. விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, “இந்த சாலையின் இறுதிக்கட்ட பணிகள், மழை நீர் மேலாண்மை உள்ளிட்டவை இன்னும் முடிவடையவில்லை. இதனால் பிரதமர் மோடி இந்த சாலையை திறந்தால் மழை வெள்ளம் தேங்க வாய்ப்பு இருக்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில் மோடி அவசர அவசரமாக இந்த சாலையை தொடங்கி வைக்கிறார்” என விமர்சித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவுக்கு தேங்கிய நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 10 கிமீ தூரத்துக்கு நெரிசலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி, தேசிய பேரிடர் மீட்பு குழு ஊழியர்கள் இன்ஜின் மூலம் நீரை வெளியேற்றிய பிறகே வெள்ளம் வடிந்தது. இந்நிலையில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், சாலையில் வெள்ளம் தேங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT