Published : 17 Mar 2023 10:02 AM
Last Updated : 17 Mar 2023 10:02 AM
புதுடெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரும் விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வரும் சீக்கிய அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(Sikhs for Justice) எனும் அமைப்பு சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னும் என்பவரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை இந்தியா கடந்த 2019ம் ஆண்டு தடை செய்தது.
இந்நிலையில், இந்த அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரிப்பதற்கான வாக்கெடுப்பை உலகின் பல பகுதிகளில் வாழும் சீக்கியர்களிடையே நடத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலிஸ்தான் வாக்கெடுப்பின் பின்னணியில் பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் இருப்பதாக முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் இவர், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ''இந்தியாவின் பஞ்சாப் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஐஎஸ்ஐ அமைப்பின் அறிவுறுத்தலின்படி வெளிநாடுகளில் உள்ள சிலர் இது குறித்து பேசி வருகிறார்கள்.
இந்தியாவில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற சீக்கியர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தால் அதனை புரிந்து கொள்ள முடியும். ஆனால், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தான் அவர்களை தவறாக வழிநடத்துகிறது. பாகிஸ்தான் கொடுக்கும் பணத்திற்காக சிலர் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்வந்த் சிங் தகேதார், ''அம்ரித்பால் சிங் துபாயில் இருந்தபோது அவர் மூளைச் சலவை செய்யப்பட்டார். அவர் ஒரு பாரம்பரிய சீக்கியர் அல்ல. சீக்கிய வரலாற்றை அறியாதவர் அவர். அம்ரித்பால் சிங்கைப் போல பலர் வருவார்கள். ஏனெனில் அவர்களை ஐஎஸ்ஐ இயக்குகிறது. காலிஸ்தான் பெயரைப் பயன்படுத்தி அதிக அளவில் பணத்தைச் சேர்த்தவர் அம்ரித்பால் சிங். அவர் வெற்றிபெறுவார் என நான் நினைக்கவில்லை. இந்தியாவோடு போர் புரிந்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாவார்கள் என்பதால், போர் புரியாமல் இந்தியாவை தொந்தரவு செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவர்களின் கையாளாக இருப்பவர்கள்தான் காலிஸ்தான் குறித்து பேசி வருகிறார்கள்'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT