Published : 16 Mar 2023 11:25 AM
Last Updated : 16 Mar 2023 11:25 AM
புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டுவரும் நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 16) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பதிவில்,"இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் ... அங்கு சந்திக்கலாம் அனுராக் தாக்கூர், ஸ்மிருதி" என்று ராகுல் காந்தியின் படத்தினை பகிர்ந்திருந்தார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்களில் தாக்கூரும், ஸ்மிருதியும் முன்னிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி," மிஸ்டர் காந்தி, நாட்டில் ஜனநாயகம் ஒன்றும் அழிவில் இல்லை. ஆனால், வெளிநாட்டில் நீங்கள் நடந்து கொண்ட உங்களின் இந்த நடவடிக்கையால், காங்கிரஸின் அரசியல் அழிவில் உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
மற்றொரு அமைச்சரான அனுராக் தாக்கூர் கூறுகையில், ''அவர் (ராகுல் காந்தி) வெளிநாட்டு மண்ணில், வெளிநாட்டு நண்பர்களிடம், வெளிநாட்டு செய்தித்தாள்கள், ஊடகங்களிடம் எவ்வளவு உதவிகள் கேட்டாலும் அதனால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டவர்கள் இந்தியாவில் ஆளுமை செலுத்த முடியாது. நீங்கள் இந்தியாவில்தான் வாக்கு செலுத்த வேண்டும். இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலே இல்லை. அதனால் உங்களின் கேம்ரிட்ஜ் அழுகை, லண்டன் பொய்களை விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்து மன்னிப்பு கேளுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இவர்களின் வரிசையில் இன்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இணைந்துள்ளார். அவர்,"ராகுல் காந்தி லண்டன் கருத்தரங்கில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நமது ஜனநாயகம், நீதித்துறை மற்றும் தேசத்தை அவமதித்துவிட்டார். நமது நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக நாம் வலுவாக குரல் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. "நாடாளுமன்றத்தை இயங்க விடமாமல் செய்யவும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரும் எங்களின் கோரிக்கையை நிராகரிக்கவுமே பாஜக இவ்வாறு செயல்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி எல்லாம் விவாதிக்க அரசு தயாராக இல்லை. மோடி பலமுறை வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்கு எதிராக பேசியிருக்கிறார். மன்னிப்பு கேட்கும் பேச்சிற்கே இடமில்லை" என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. அதுமுதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் கோரி வரும் நிலையில், தனது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT