Published : 16 Mar 2023 06:20 AM
Last Updated : 16 Mar 2023 06:20 AM
புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் பயில்பவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பல்வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘நீட் பி.ஜி.’ தேர்வுக்கு பதில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகும் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், அங்கு வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியாத அளவு அதிகமாக உள்ளது. அதனால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
எனினும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், நாடு திரும்பியதும் நேரடியாக மருத்துவ தொழில் செய்யவோ அல்லது உயர் கல்வியில் சேரவோ முடியாது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) நடத்தும் ‘எப்எம்ஜிஇ’ என்ற தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வில் அவ்வளவு சுலபமாக தேர்ச்சி பெறவும் முடியாது. எனவே, எப்எம்ஜிஇ தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இன்னும் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், எப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஓராண்டு உள்ளுறை மருத்துவராக (இன்டர்ன்) பணியாற்ற வேண்டும். இவ்வளவையும் செய்து முடித்தால்தான் மாநில மருத்துவக் கவுன்சில் அவர்களை மருத்துவர்களாக அங்கீகரித்து பதிவெண் வழங்கும்.
இந்தச் சூழலில், எம்எம்ஜிஇ தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ‘எம்சிஐ’க்கு பதிலாக தொடங்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) சமீபத்தில் அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே இருந்த ‘நீட் பிஜி’ என்ற தேர்வு இந்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும்.
இது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என்ற 2 பிரிவுகளாக நடத்தப்படும். இந்தியாவில் எம்பிபிஎஸ் இறுதி யாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் மருத் துவம் படித்து முடித்து இங்கு இளநிலை மருத்துவருக்கான அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத முடியும். இந்த திட்டம் 2024 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் தகுதியுள்ள மருத்துவர்களை உருவாக்க முடியும் என்று அரசு கருதுகிறது.
இதற்கிடையில், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் அந்நாட்டு மொழிகளிலும் சில ஆண்டுகள் மருத்துவம் போதிக் கப்படுகின்றன. இந்த முறையில் படித்தால் இனி இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்காது. முழுக்க, முழுக்க ஆங்கில வழிக் கல்வியிலேயே மருத்துவம் முடிப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதுபோல், மேலும் பல நிபந்தனைகளை அரசு கெஜட்டில் என்எம்சி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்வதால், இந்திய மாணவர்கள் சுமார் 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுவிட்டனர். தற்போது இவர்கள் தமது மருத்துவக் கல்வியை இணையம் வழியாகவே தொடர்கின்றனர். இதுபோல், குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இணையவழியில் பயில்வதையும் என்எம்சி அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT