Published : 15 Mar 2023 12:22 PM
Last Updated : 15 Mar 2023 12:22 PM
புதுடெல்லி: அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை ஆளும் கட்சியும் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு திங்கள்கிழமைத் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுத் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினரும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கிய நேற்று முன்தினமும், நேற்றும் இருஅவைகளும் முடங்கின. இந்தநிலையில், மூன்றாவது நாளான இன்று (மார்ச் 15) இருஅவைகளும் கூடின. மக்களவை தொடங்கியதும் அமளி ஏற்பட்டது. இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாநிலங்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் போராட்டம்: இதற்கிடையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பிகள் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜகவின் வலியுறுத்தல் குறித்து பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார். நீங்கள் பல வெளிநாடுகளுக்குச் சென்று இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் மனிதநேயத்தை அவமதித்தீர்கள். ராகுல் காந்தி ஜனநாயகத்தைப் பற்றித்தான் பேசினார். அதனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
ராகுல் பங்கேற்பு: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி தொடரும் நிலையில், வெளிநாடு சென்றிருந்த ராகுல் காந்தி இன்று நாடு திரும்பியுள்ளார். அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவார் என்று தகவல் வெளியாகியது.
இன்றைய நோட்டீஸ்கள்: அரசியலமைப்பு பிரிவு 105ன் கீழ், நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்கவேண்டு என்று காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தார். அதானி குழும விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று விதி 267-ன் கீழ் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT