Published : 27 Sep 2017 10:19 AM
Last Updated : 27 Sep 2017 10:19 AM
கேரள அரசியல் களத்தை பரபரப்பாக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் நேற்று சமர்ப்பித்தார்.
கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, மின் தட்டுப்பாட்டை சமாளிக்க சூரிய ஆற்றல் மூலம் மின்உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை அறிவித்தது. அரசு நிலங்கள், தனியார் தோட்டங்கள், பண்ணை வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் மின் உற்பத்தி செய்வதுதான் நோக்கம். இதற்கான உபகரணங்களை வாங்க அரசு மானியம் வழங்கும் எனவும், இத்திட்டத்திற்கான சோலார் பேனல்களை விற்பனை செய்யும் உரிமையை கேரள முதல்வர் உம்மன் சாண்டி தங்கள் நிறுவனத்துக்கு வழங்கியிருப்பதாகவும் வசூல் வேட்டை நடத்தினார் நடிகை சரிதா நாயர்.
‘டீம் சோலார் எனர்ஜி நிறுவனம்’ நடத்தி வந்த சரிதா நாயர், இதற்கென அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி கையெழுத்திட்ட ஆவணங்களையும் காட்ட, ஏராளமானோர் 5 லட்சம் முதல், 50 லட்சம் வரை சரிதா நாயரிடம் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் சோலார் பேனலை கண்ணில்கூட காட்டவில்லை. பல மாதங்கள் காத்திருந்தும் கொடுத்த பணத்துக்கும் உரிய பதில் இல்லாததால், கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் சோலார் பேனல் விவகாரத்தில் பல கோடிகளுக்கு முறைகேடு நிகழ்ந்திருப்பது அம்பலமானது.
உம்மன் சாண்டி கையெழுத்திட்ட ஆவணங்களும் சரிதா நாயர் வசம் இருந்ததால் இடதுசாரிகள் இவ்விவகாரத்தை கையில் எடுத்தனர். சட்டசபை முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். இதனால், முதல்வராக இருந்த உம்மன் சாண்டிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது ஆட்சிக் காலத்திலேயே 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் சோலார் பேனல் விவகாரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சரிதா நாயர் பேசப்பேச காங்கிரஸ், உம்மன்சாண்டியின் ‘இமேஜ்’ வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சரிதா நாயர் சமர்ப்பித்த ஆவணங்களை உருவாக்க உதவி செய்ததாக முதல்வர் அலுவலக பணியாளர்கள் ஜோபன், ஜிக்குமோன், முதல்வரின் பாதுகாவலர் சலீம் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சரிதா நாயரின் நிறுவனத்தை நடத்தி வந்த அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். தமிழகம், கேரளாவை சேர்த்து சரிதா மீது 33 வழக்குகள் பதியப்பட்டன. இதில் முடிக்காலை சேர்ந்த சஜத் என்பவர் தொடுத்த, ரூ.40 லட்சம் மோசடி வழக்கில், சரிதா நாயர், முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும், தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சோலார் பேனல் வழக்கில் 9 மாதங்கள் சிறையில் இருந்த சரிதா இப்போது ஜாமீனில் வந்துள்ளார்.
216 சாட்சிகளிடம் விசாரணை
கொச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சிவராஜன் கமிஷன் 2013-ல் ஆரம்பிக்கப்பட்டாலும், சாட்சிகளிடம் விசாரணையை தொடங்கியது 2015 ஜனவரி 12-ம் தேதியில் இருந்துதான். இரண்டு ஆண்டுகளில் 216 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
துவக்கத்தில் சரிதா நாயர் யார் என்று தனக்குத் தெரியாது என்றே கூறி வந்தார் உம்மன் சாண்டி. முதல்வர் அலுவலகத்தில் நடப்பவற்றை, மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல்வர் தரிசனம் என்னும் பெயரிலான நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சிக்கான கேமரா பதிவில் சரிதா நாயர் வருகை பதிவாகி இருந்ததும் அவர் மீதான சர்ச்சைக்கு தூபம் போட்டது.
ஊழல் முதல் பாலியல் புகார் வரை
இவ்வழக்கில் சிக்கிய சரிதா நாயர் துவக்கத்தில் உம்மன் சாண்டி தன்னிடம் ரூ.1 கோடியே 90 லட்சத்தை ஏமாற்றியதாக கூறியவர், கடந்த சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் கேரள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் அடூர் பிரகாஷ், பி.ஏ.அனில்குமார், ஆரியாடன் முகமது, கே.சி.வேணுகோபால் எம்பி, எம்எல்ஏக்கள் மோன்ஸ் ஜோசப், ஹைபி ஈடன், ஏ.பி.அப்துல்லாகுட்டி, பி.சி.விஸ்வநாத் என பட்டியலே படித்தார் சரிதா நாயர். விசாரணை கமிஷனிலும் தெரிவித்திருந்தார் சரிதா.
4 பாகங்களாக அறிக்கை தாக்கல்
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், விசாரணை கமிஷனின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் நேற்று மதியம் அறிக்கையை தாக்கல் செய்தார். பத்திரிக்கையாளர்கள் இது தொடர்பாக பினராயி விஜயனிடம் கேட்டபோது, “நான்கு பாகங்களாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டுத்தான் விரிவாக பேச முடியும்” என்றார். இதற்கிடையே சரிதா நாயர், “சோலார் பேனல் விவகாரத்தில் நான் ஒரு கருவிதான். இன்னும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் வெளியில் உள்ளனர். அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வர் வைக்க வேண்டும்”என கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
யார் இந்த சரிதா நாயர்?
கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா கல்லூரி படிப்பை பாதியில் குடும்ப சூழலால் விட்டுவிட்டு திருமணம் செய்தவர். கேரள ஹவுசிங் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சேர்ந்து உதவி மேலாளர் பதவி வரை வந்தவர், 2004-ல் பண மோசடி செய்ததாக நீக்கப்பட்டார்.
2006-ல் தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு தனது நண்பர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து வாழத் துவங்கினார். சரிதாவுடன் வாழ்வதற்காக தனது முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் பிஜூ கைதாகி ஜாமீனில் வெளியில் வந்ததெல்லாம் தனிக் கதை. தொடர்ந்து இருவரும் காற்றாலை உற்பத்தியில் முதலீடு செய்யக் கோரி கேரள, தமிழக தொழிலதிபர்களை அணுகி லட்சக்கணக்கில் பணம் திரட்டினர். தமிழகத்தில் வடவள்ளி, நீலகிரி எனத் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்ட அவர்கள் 2008-ல் பிடிபட்டனர்.
ஜாமீனில் வெளி வந்த பின்னர் சோலார் பேனல் வைத்து தருவதாக கேரளாவில் பணம் திரட்டத் தொடங்கினர். 2011-ல் துவங்கிய ‘டீம் சோலார் எனர்ஜி’ நிறுவனத்தை கோட்டயத்தில் திறந்து வைத்தவர் அப்போதைய கேரள கலாச்சார அமைச்சர் கே.சி.ஜோசப்.
தமிழகத்தில் காற்றாலை!
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஜவுளி உற்பத்தி ஆலை நிர்வாக இயக்குநர். இவரிடம் ‘சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் எனக் கூறி, சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாக 26 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதேபோல் உதகையைச் சேர்ந்த அபு பாபாஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்ஸ்னா என்.கிளாசண்ட் ரூ.6.57 லட்சத்தை சரிதா நாயர் ஏமாற்றியதாக புகார் கொடுத்து அது தொடர்பான வழக்குகள் கோவையில் நடந்து வருகிறது.
சரிதா நாயரின் குற்றச்சாட்டுக்களை உம்மன் சாண்டி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், விசாரணை அறிக்கையின் முடிவுகள்தான் இனி கேரள அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் உம்மன் சாண்டியின் சாம்ராஜ்யத்தை முடிவு செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT