Published : 14 Mar 2023 05:16 AM
Last Updated : 14 Mar 2023 05:16 AM

ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து

பொம்மன், பெள்ளி | கோப்புப்படம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும்.

கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் யானைக்குட்டி ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் இந்த குட்டியை மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன், கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையை பராமரித்து வந்தார்.

இந்நிலையில், இந்த குட்டி யானையை முதுமலை கொண்டு சென்று பராமரிக்க கிருஷ்ணகிரி வனத்துறையினர் ஆலோசித்தனர். இதற்கு முதன்மை வனப்பாதுகாவலர் அனுமதி அளிக்கவே, இந்த குட்டி யானை கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு வரப்பட்டது. இந்த குட்டி யானையின் பராமரிப்பாளர்கள்தான் பொம்மனும், பெள்ளியும். குட்டி யானைக்கு ‘ரகு’ என்ற பெயர் வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு, தாயை பிரிந்த மற்றொரு யானை பொம்மியையும் இவர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாயைப் பிரிந்து தவித்த 2 யானைக் குட்டிகளை பராமரிக்கும் பழங்குடி தம்பதியின் கதையை ஆவணப் படமாக்கி இருந்தார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ். நெட்பிளிக்ஸில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது ‘தி எலிஃபன்ட் விஸ்பரரஸ்’ ஆவணப்படம்.

இப்போது இப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. எவ்வித பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் பெள்ளி அன்றாட வேலையைப் பார்த்து வருகிறார். பொம்மன் தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், தருமபுரி கோட்ட சரகர் நடராஜன் மற்றும் வனத்துறையினர் பரிசு வழங்கி பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x