Published : 09 Jul 2014 02:16 PM
Last Updated : 09 Jul 2014 02:16 PM

மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு நோட்டீஸ்

மான் வேட்டையாடிய வழக்கில், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி இந்தி நடிகர் சல்மான் கானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்திப் படப்பிடிப்பு கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் ஒரு கிராமத்தில் நடந்தது. அப்போது இரவு நேரத்தில், நடிகர் சல்மான் கான், தன்னுடன் நடித்த சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோருடன் சேர்ந்து, 2 சிங்காரா ரக மான்களையும், ஒரு ‘பிளாக்பக்’ ரக மானையும் வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது.

வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி, சல்மான் கானுக்கு ஒரு வழக்கில் 5 ஆண்டுகளும், இன்னொரு வழக்கில் ஓர் ஆண்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சல்மான் மேல் முறையீடு செய்துள்ளார். அவர் ஜாமீனில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் லண்டன் செல்ல முயன்றபோது, 5 ஆண்டு தண்டனை பெற்றதால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. பிரிட்டன் சட்டப்படி, 4 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் விசா மறுக்கப்படும்.

இதையடுத்து சல்மான் கான் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கடந்த நவம்பரில் அவரது 5 ஆண்டு சிறைத் தண்டனையை சஸ்பெண்ட் செய்தது.

உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஜே.முகோபத்யாயா தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2002-ம் ஆண்டு, கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக, சல்மான் கான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x