Last Updated : 14 Sep, 2017 07:57 AM

 

Published : 14 Sep 2017 07:57 AM
Last Updated : 14 Sep 2017 07:57 AM

விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகளுக்கு 6 மாத காத்திருப்பு காலம் கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

இந்துக்கள் விவாகரத்து பெற 6 மாதம் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்துக்கள் திருமணச் சட்டத்தின் பிரிவு 13பி(2)-ன் படி, விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகள் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவர்கள் மனம் மாற 6 மாத காலம் பிரிந்திருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்படுகிறது. அதன் பிறகும், அவர்கள் நிலையில் உறுதியாக இருந்தால், விவாகரத்து வழங்கப்படும். இந்நிலையில், இப்பிரிவை எதிர்த்து விவாகரத்து கோரும் தம்பதிகள் அமர்தீப் சிங் - ஹர்வீன் கவுர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தொடர்ந்த மனுவில், “இந்து திருமணச் சட்டப்படி, இருதரப்பிலும் விருப்ப முறையில் விவாகரத்து கோருவோர் குறைந்தபட்சம் 6 மாதம் பிரிந்து வாழ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் ஏற்கெனவே 8 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். ஜீவனாம்சம், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களையும் நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம். இந்நிலையில், விவாகரத்து பெற மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை தேவையற்றது. இதை தளர்த்தி சட்டப்படி விவாகரத்து வழங்க வேண்டும்” என்று கோரினர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அவர் வாதாடும்போது, ‘விவாகரத்து பெற 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, சட்டப்படி கட்டாயமல்ல. நீதிமன்றம் விரும்பினால், இந்த நடைமுறையை தளர்த்தி விவாகரத்து வழங்கலாம்’ என்று தெரிவித் தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்து திருமண சட்டப்படி இருதரப்பும் சம்மதித்து விவாகரத்து கோரும் நிலையில், அவர்கள் அவசரப்பட்டு முடிவெடுத்து விடக்கூடாது என்பதற்காகவும், மனம் மாறி தங்கள் கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்துகொள்ள வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்திலும் 6 மாத காலம் பிரிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அந்த காலத்திற்குப் பின்பும் அவர்கள் தங்கள் விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படுகிறது.

இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், தம்பதிகள் இருவரும் 8 ஆண்டுகள் பிரிந்து வாழ்கின்றனர். மேலும், ஜீவனாம்சம், குழந்தைகள் பராமரிப்பு ஆகியவை குறித்து ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காத்திருப்பு கால விதிமுறையை தளர்த்தலாம்.

விவாகரத்து கோரும் தம்பதிகள் குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரிந்திருந்தால், ஜீவனாம்சம், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் ஒருமித்த முடிவுக்கு அவர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு காத்திருப்பு கட்டாயம் என்ற விதிமுறையை தளர்த்தலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவெடுக்கலாம். விவாகரத்துக்கு விண்ணப்பித்து ஒரு வாரம் கழித்து காத்திருப்பு காலத்தை தளர்த்தக் கோரி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து உரிய நீதிமன்றங்கள் முடிவெடுக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு மூலம் ஒரு வாரம் கழித்து 2-வது வாரத்திலேயே அவர்களுக்கு விவாகரத்து கிடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x