Last Updated : 13 Mar, 2023 09:19 PM

 

Published : 13 Mar 2023 09:19 PM
Last Updated : 13 Mar 2023 09:19 PM

பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம்’ நிறுத்தம்: ரவிக்குமார் எம்.பி விமர்சனம்

கோப்புப்படம்

புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)’ கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்ணா பூர்ண தேவி பதில் அளித்தார்.

விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ‘பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களை விஞ்ஞானிகளாக வளர்த்தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)ஆகும். திறமையான மாணவர்களை அடையாளம் காண என்சிஇஆர்டிக்கு, என்டிஎஸ்எஸ் உதவியிருக்கிறதா? என்டிஎஸ்எஸ் திட்டத்தை அரசாங்கம் தொடர்கிறதா? இல்லையென்றால், அது நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ண தேவி அளித்த பதிலில் , “திறமையான மாணவர்களை அடையாளம் காண என்சி இஆர்டி-க்கு, என்டிஎஸ்எஸ் உதவியது. என்டிஎஸ்எஸ் விருது பெற்ற பலர், உலகெங்கிலும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் முன்னணி பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். என்டிஎஸ்எஸ் என்பது கல்வி அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒன்றிய அரசின் திட்டமாகும். என்டிஎஸ்எஸ் அதன் தற்போதைய வடிவத்தில் கடந்த மார்ச் 31, 2021 வரை தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான நோக்கம் திறம்பட நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தனது பதிலுடன் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர், 2019 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் அந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் மக்களவையில் சமர்ப்பித்திருந்தார். இதில், கடந்த 2018-19 இல் 2103 மாணவர்களும், 2019-20 இல் 2060 மற்றும் 2020-21 இல் 2033 மாணவர்கள் உதவித்தொகைக்காகத் தேர்வாகி இருந்தனர். இதிலும் பல்வேறு வகுப்புகளின் கீழ் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டிருந்தது.

இதன் மீது, விழுப்புரம் எம்.பியான சி.ரவிக்குமார் கருத்து கூறுகையில், ‘கல்வியில் அறிவியல் சிந்தனைகளை ஒழித்துவிட்டு சமயச் சார்பான கருத்துகளைத் திணித்துவரும் பாஜக அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுக்கும் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டது. நிறுத்திவிட்டதாக ஒப்புக்கொள்ளாமல் மாற்றி அமைக்கப் போகிறோம் எனக் கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x