Published : 13 Mar 2023 06:44 PM
Last Updated : 13 Mar 2023 06:44 PM
புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
"அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவிலும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்" என்று மனுக்களில் கோரப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பர்திவாலா அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக மத்திய அரசுபதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி மத்தியஅரசு சார்பில் நேற்று 56 பக்கங்கள் கொண்ட பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தன்பாலின திருமணம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டில் நவ்ஜோத் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தன்பாலின உறவு என்பது தனிநபரின் விருப்பம். அதற்கு சட்டப்பூர்வமாக உரிமை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை என்றுநவ்ஜோத் சிங் ஜோஹர் வழக்கில்உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கணவன், மனைவி திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. தன்பாலின திருமணத்தை இந்திய சமூகம், பாரம்பரியம் ஏற்கவில்லை. அண்மைகாலமாக பல்வேறு வகையான திருமணங்கள், உறவுகளை சமூகம் ஏற்றுக் கொண்டு வருகிறது. அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க அரசு விரும்பவில்லை. அதேநேரம் தன்பாலின உறவு சட்டப்பூர்வமானது என்பதையும் மறுக்கவில்லை. இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT