Published : 12 Mar 2023 07:45 PM
Last Updated : 12 Mar 2023 07:45 PM
புதுடெல்லி: தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், "திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு , மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "தன்பாலின உறவாளர்கள் திருமண வாழ்க்கையை, இந்திய குடும்பமுறையுடன் ஒப்பிட முடியாது. தன்பாலின உறவாளர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் நடைமுறையில் இருக்கும் குடும்ப நடைமுறையுடன் ஒப்பிட முடியாது.
தன்பாலின உறவாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, அவற்றை பதிவு செய்வதற்கும் அப்பாற்பட்டது குடும்ப பிரச்சினைகள். தன்பாலின உறவாளர்கள் சேர்ந்து வாழ்வதும், இணை சேர்வதும் தற்போது குற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதனை இந்திய குடும்ப அலகு முறையுடன் ஒப்பிட முடியாது. உயிரியல் ரீதியான ஆண் - பெண், கணவன் - மனைவியாக இணைந்து வாழ்ந்து, அவர்கள் பெற்றெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளே, குழந்தைகளாகவும், குழந்தை பெற்றெடுக்கும் பெண் தாயாகவும் கருதப்படுவர்.
திருமணப் பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் பொது முக்கியத்துவம் கொண்ட குடும்பத்தை உருவாக்குகின்றனர். குடும்பம், சமூகம் சார்ந்தது. இது பல உரிமைகளையும், பொறுப்புகளையும் உள்ளடக்கியது. எனவே, திருமணத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகரம் என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. அதனால் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட சமூக ரீதியிலான உறவுமுறையை அங்கீகரிப்பது அடிப்படை உரிமையாக இருக்காது.
அரசமைப்புச் சட்டத்தின் 19-வது ஷரத்தின்படி, அனைத்து குடிமக்களுக்கும் ஒன்றிணைய உரிமை உள்ளது. ஆனால், அத்தகைய ஒன்றிணைதலுக்கு அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்கான உரிமை குறித்த ஷரத்து 21-ன் கீழ் இதுபோன்ற திருமணங்களுக்கான மறைமுகமான அனுமதியை இதில் சேர்க்கலாம்.
தன்பாலின உறவாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, தற்போது நடைமுறையில் உள்ள திருமண சட்டங்களுக்கு எதிரானது. தடை செய்யப்பட்ட இதுபோன்ற உறவுமுறைகளின் நிலை, திருமணங்களின் நிலை, வழக்கத்தில் உள்ள சடங்கு முறைகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது.
கணவன் மனைவியை பிரதிநிதித்துவப்படுத்தும், ஆண் - பெண் இடையிலான திருமணத்தை சட்டப்பூர்வமான உறவாக அங்கீகரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். இந்த வழக்கில் மனுதாரர்கள், திருமணம் மற்றும் அதோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும், குடும்ப வன்முறை சட்டம் உள்ளிட்ட பிற விதிகளை, தன்பாலின உறவாளர்களின் திருமணங்களுக்கு செயல்படுத்த இயலாது.
மனுதாரர்கள் கோரும் உறவுமுறைகளின் இயல்புகளை தற்போது நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்புகளுக்குள் பொத்திப் பார்க்க முடியுமா என்பது இந்த வழக்கில் எழும் கேள்வி அல்ல. மாறாக, சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற திருமணங்களின் அங்கீகாரத்துடன் தொடர்புடைய பலன்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்களை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.
தன்பாலின உறவுகள் சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால், ஆண் - பெண் இணைந்த திருமண முறையிலான பாலின உறவுகளை மட்டுமே அரசு அங்கீகரிக்கிறது. பிறவகையான திருமணங்கள், தனிநபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட புரிதல்களை அரசு அங்கீகரிக்கவில்லை. அது சட்டவிரோதமானதும் அல்ல" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...