Published : 12 Mar 2023 04:43 AM
Last Updated : 12 Mar 2023 04:43 AM
புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், தேஜஸ்வி யாதவுக்கு 2-வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தனது கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தவர் பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத். அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வேயில் வேலை பெற லாலு குடும்பத்தினருக்கு தங்கள் நிலத்தை லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட் டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ரப்ரி உட்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அனைவரும் வரும் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், பிஹார் துணை முதல்வரும் லாலு மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமாக டெல்லியில் உள்ள வீடு, லாலுவின் மகள் மிசா பாரதி உள்ளிட்ட சிலருக்கு சொந்தமாக பாட்னாவில் உள்ள வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதனிடையே, சனிக்கிழமை மதியம் நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ அதிகாரிகள் 2-வது முறை சம்மன் அனுப்பினர். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அப்போது அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் நேற்றும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவில்லை.
தேஜஸ்வி யாதவ் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என சிபிஐ அலுவலகத்துக்கு நேற்று தகவல் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிப்பு: டெல்லியில் உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி ஆகியோரது வீடுகள் உட்பட, தேசிய தலைநகர் மண்டலம், மும்பை மற்றும் பாட்னா ஆகிய பகுதிகளில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இவற்றில் லாலுவின் மற்ற மகள்கள் ராகினி, சந்தா மற்றும் ஹேமா யாதவ், லாலுவுக்கு நெருக்கமான முன்னாள் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ அபு தோஜனா ஆகியோரது வீடுகளும் அடங்கும். இந்த சோதனையில் 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள், ரூ.70 லட்சம் ரொக்கம், ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லியில் உள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் வீடு ஏ.கே. இன்போசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் இந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது. ரயில்வேயில் வேலை பெற்ற நபர் ஒருவர் லஞ்சமாக தனது நிலத்தை இந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அபு தோஜனாவுக்கு சொந்தமான மெரிடியன் கட்டுமான நிறுவனத்துக்கு 4 பேர் நிலங்களை விற்றுள்ளனர். இவ்வாறு அமலாக்கத்துறை அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT