Published : 12 Mar 2023 04:55 AM
Last Updated : 12 Mar 2023 04:55 AM
புதுடெல்லி: அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளில் பயோ கழிப்பறை வசதி செய்யப்பட்டு வருகிறது. ராஞ்சி ராஜ்தானி ரயிலில் சோதனை முயற்சியாக பயோ கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு மக்களவையில் கூறும்போது, “நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சுமார் 1,450 பெட்டிகளில் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன" என்றார்.
கடந்த ஜனவரியில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லி ரயில் நிலையத்தைப் பார்வையிட்டார். அப்போது ரயில்களில் பயோ கழிப்பறை வசதியை அவர் ஆய்வு செய்தார். அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அவர் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: முதல்கட்டமாக ராஜ்தானி ரயில்களின் அனைத்து பெட்டிகளிலும் பயோ கழிப்பறையை பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதன்பிறகு அனைத்து மெயில், விரைவு ரயில்களிலும் பயோ கழிப்பறை வசதி படிப்படியாக ஏற்படுத்தப்படும்.ஓராண்டில் 6,000 ரயில் பெட்டிகளில் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தற்போதைய கழிப்பறைகளால் ரயிலில் துர்நாற்றம் வீசுகிறது. அதற்குப் பதிலாக பயோ கழிப்பறைகளை பொருத்தும்போது துர்நாற்றம் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். பயோ கழிப்பறைகளுடன் புதிய வகை தானியங்கி சுத்தம் செய்யும் சாதனங்களும் இணைக்கப்படும். இதன்மூலம் பயணிகளின் சுகாதாரம் முழுமையாக உறுதி செய்யப்படும். விமான பயணத்துக்கு இணையாக ரயில் பயணமும் அமையும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT