Published : 11 Mar 2023 03:06 PM
Last Updated : 11 Mar 2023 03:06 PM
பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், இந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் (சிபிஐ) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலமோசடி தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் அம்மாநில துணை முதல்வருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது ஆகியவை தொடர்பாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ''ஆர்ஜேடி தலைவர்களின் வீடுகளில் கடந்த 2017-ல் சோதனை நடந்தது. அதன் பின்னர் நாங்கள் (ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம்) தனித்தனி வழியில் பயணித்தோம். ஐந்து ஆண்டுகள் கழிந்து நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். இப்போது சோதனைகளை நடத்துகிறார்கள். என்ன சொல்ல வேண்டும். யாருடைய கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கிறார்கள்? பொதுவாக இதுமாதிரியான விஷயங்களில் நான் கருத்துக்கள் கூறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்'' என்று தெரிவித்தார்.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில், வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ, அவருக்கு கடந்த மாதம் 4ம் தேதி சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சிபிஐ இன்று (மார்ச் 11) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பாக, பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 10) சோதனை மேற்கொண்டனர். பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. நேற்றைய சோதனையில், ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையில் இந்த சோதனைகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், ,"எனக்கு ராஸ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாஜகவுடன் கருத்தியில் ரீதியிலான போராட்டம் உள்ளது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT