Published : 11 Mar 2023 01:52 PM
Last Updated : 11 Mar 2023 01:52 PM

ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் ஒருபோதும் நான் பணிய மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ்

தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ் | கோப்புப்படம்

புதுடெல்லி: அவர்கள்(ஆர்எஸ்எஸ், பாஜக) முன் நான் பணிந்தது இல்லை; என் கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பணியப்போவதுமில்லை என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

நிலமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை லாலு பிரசாத்தின் மகன், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில், தனது மகள்கள், பேத்திகள் மற்றும் கர்ப்பிணி மருமகள் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் ஆதாரம் இல்லாத வழக்குகள் மூலம் பாஜக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று, எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பாஜக இவ்வளவு கீழ்தரமான அளவிற்கு இறங்குமா?" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட் பதிவில்,"எனக்கு ராஸ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாஜகவுடன் கருத்தியில் ரீதியிலான போராட்டம் உள்ளது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் வீட்டிலும், லாலுவின் மகள் மிசா பாரதி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டெல்லி, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் பிஹாரில் 24 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இதனிடையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவிடம் அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வேயில் வேலை பெற லாலு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களிடம் தங்கள் நிலங்களை கொடுத்ததாகவும் அல்லது குறைந்த விலைக்குவிற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் லாலு, ரப்ரி உட்பட 14 பேர் மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 15-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் உள்ள லாலுவின் மனைவி ரப்ரி தேவியின் வீட்டில் கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தி அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x