Published : 11 Mar 2023 04:36 AM
Last Updated : 11 Mar 2023 04:36 AM
திருவனந்தபுரம்: கேரள முதல்வருக்கு எதிரான ஆதாரங்களை தரக்கோரி ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன் பெயரை கூறி அவரது தூதர் ஒருவர் என்னை அணுகினார். பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் உள்ள ஹோட்டலில் அந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கான ஆதாரங்கள், புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள், மகன் மற்றும் கூடுதல் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன் தொடர்பாக என்னிடம் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு அவர் கோரினார். இதற்காக, ரூ.30 கோடி தருவதாக பேரம் பேசினார். மேலும், இந்த வழக்கு முடிந்தவுடன் இங்கிலாந்து, மலேசியா அல்லது வேறு ஏதேனும் நாட்டில் குடியேற உதவி செய்வதாகவும் கூறினார்.
இந்த உடன்பாட்டுக்கு மறுத்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முடிவெடுக்க ஒருவாரம் அவகாசத்தை அவர் வழங்கியுள்ளார்.
இந்த பேரம், மிரட்டல் குறித்து அமலாக்க இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளேன். பெங்களூரு போலீஸார் எனக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் சமரசம் செய்ய நான் தயாராக இல்லை. கடைசி மூச்சு வரை போராடுவேன். அனைத்து ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பேன். இவ்வாறு ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன், இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலர் விளக்க மளிக்க வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT