Published : 11 Mar 2023 04:44 AM
Last Updated : 11 Mar 2023 04:44 AM

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா உண்ணாவிரதம்

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா.

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினருமான கவிதா, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிபிஎம், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, அகாலி தள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கவிதா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் வரையில் கவிதாவுக்கு சிபிஎம் ஆதரவு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சிக்கும் கவிதா அழைப்பு விடுத்திருந்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கவிதாவின் இந்த முன்னெடுப்பு அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து கவிதா கூறுகையில், “இந்தியா முன்னேற அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக பாஜக 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறி உள்ளது” என்று தெரிவித்தார்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு கடந்த 9-ம் தேதி ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னிட்டு அந்தத் தேதியில் நேரில் ஆஜராக கவிதா விலக்கு கோரினார். இதையடுத்து, அமலாக்கத் துறை உத்தரவின்படி இன்று வழக்கு விசாரணையில் கவிதா ஆஜராக உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x