Published : 08 Mar 2023 11:51 AM
Last Updated : 08 Mar 2023 11:51 AM
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி வரும் 10 ம் தேதி டெல்லியில், ஆர்ப்பாட்டம் நடத்த கவிதா தயாராகி வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத்துறை இந்த சம்மனை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நாளை தனது அமைச்சர்களுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பதிலளித்துள்ள கவிதா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மகளிர் இட ஒத்துக்கீடு மசோதா நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எங்களுடைய ஒரே கோரிக்கை, பெண்கள் அரசியலில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, பாரத் ஜக்ருதி, எதிர்கட்சியினருடன் இணைந்து, 10-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் மவுன விரத போராட்டம் நடத்த உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமலாக்கத்துறை எனக்கு இந்த சம்மனை அனுப்பி உள்ளது. சட்டத்தை மதிக்கும் பெண்ணாக நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இருப்பினும், தர்ணா மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க வேண்டியது இருப்பதால், விசாரணையில் கலந்து கொள்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிப்பேன்.
எங்களின் தலைவர் முதல்வர் கேசிஆர்ன் போராட்டம் மற்றும் மத்திய அரசிற்கு எதிரான குரல், பிஆர்எஸ் கட்சியின் நடவடிக்கைகள் அடக்க நினைக்கும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என்பதை மத்தியில் ஆளும் பாஜக அறிந்து கொள்ளவேண்டும். கேசிஆரின் தலைமையில் உங்களின் தோல்விகளை அம்பலப்படுத்தி, வளமான இந்தியாவுக்கான எங்களின் போராட்டத்தைத் தொடருவோம்.
மேலும் மக்கள் விரோத ஆட்சிக்கு முன் தெலங்கானா ஒரு போதும் அடிபணியாது என்று டெல்லியில் உள்ள அதிகார வெறியர்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு கவிதா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை நேற்று காவலில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT