Published : 27 Sep 2017 10:02 AM
Last Updated : 27 Sep 2017 10:02 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று காலையில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 4 மாட வீதிகளிலும் உற்சவ மூர்த்திகளை காண பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர்கள் சுவாமிக்கு ஹாரத்தி எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
இன்று கருட சேவை
திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் கருட சேவை இன்று இரவு நடை பெற உள்ளது. இதையொட்டி, தேவஸ்தானம் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கருட சேவையை காண வரும் பக்தர்களுக்காக மாட வீதிகளுக்குள் செல்ல 5 வழிகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 11 ராட்சத எல்இடி தொலைக்காட்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதவிர மாட வீதிகளில் உள்ள பக்தர்களுக்கு மதியம் முதலே இலவச உணவு, தண்ணீர், மோர் பாக்கெட்டுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 5.7 லட்சம் பக்தர்களுக்கு தேவையான இலவச உணவு, சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி, நேற்றிரவு முதல் நாளை காலை 10 மணி வரை திருப்பதியில் இருந்து திருமலைக்கு பைக்குகள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்றும், வரும் 30-ம் தேதியும் மலையேறி சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கும் திவ்ய தரிசன டோக்கன்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மொத்தம் 640 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கருட சேவை நிகழ்ச்சியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி 600 திரைகள் மூலம் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இம்முறை போலீஸார் தங்களின் உடைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராவை அமைத்து கருட சேவையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ரகசிய கண்காணிப்பு போலீஸார் சாதா ரண சீருடையில் கண்காணிப்பர். மொத்தம் 4,000 போலீஸார் இன்று கருட சேவை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். திருமலை-திருப்பதி இடையே ஒரு நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT