Published : 06 Mar 2023 02:09 PM
Last Updated : 06 Mar 2023 02:09 PM
புதுடெல்லி: சுகாதாரத்துறையில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளை, திறமையாக செயல்படுத்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக மத்திய அரசு தொடர்ந்து வெபினார்களை நடத்தி வருகிறது. இதன்படி இன்று (மார்ச்.6) நடைபெற்ற வெபினாரில் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: "நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பினை கோவிட் பொதுமுடக்கத்திற்கு முன், பொது முடக்கத்திற்குப் பின் என இரண்டு விதமாக நாம் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு) திட்டம் நோயாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரை சேமிக்க வழிவகை செய்துள்ளது. கூடுதலாக, ஜன் அவுஷாதி கேந்திரங்கள் மூலமாக நோயாளிகள் ஜெனரிக் மருந்துகள் வாங்கியதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரை சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. அதேபோல், பிஎம் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்டெக்சர் (PM-ABHIM) திட்டம் சுகாதார உள்கட்டமைப்பு வசதியை நாட்டின் அடிமட்டம் வரைக்கும் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வருடங்களாக 260 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் இளநிலை மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செவிலியர் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அவைகளில் 357, மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் உருவாக்கப்பட இருக்கின்றன.
இ - சஞ்சீவினி தொலைவழி கன்சல்டேஷன் மூலமாக தொலைதூரங்களில் உள்ள 10 கோடி நோயாளிகள் வரை பயனடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் புதிய முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி வரை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன." இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT