Published : 05 Mar 2023 04:40 AM
Last Updated : 05 Mar 2023 04:40 AM
புதுடெல்லி: ‘‘தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழரால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் விதத்தில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. எட்டாவது இணைய கருத்தரங்கு ‘கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்துடன் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது' என்ற தலைப்பில் நேற்று நடந்தது. இதில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல்அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்தாண்டு பட்ஜெட், நாட்டின் கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய சக்தியை வழங்குகிறது. நாம் தற்போது வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து டாப் கியரில் மிக வேகமாக முன்னேற வேண்டும். இதில் பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டம் முக்கிய பங்காற்றும். இது, கட்டமைப்பு திட்டம் மற்றும் வளர்ச்சியுடன் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும். இத்திட்டம் நாட்டின் கட்டமைப்பு அடையாளத்தை மாற்றப்போகிறது.
சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றில் நவீன கட்டமைப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. தரமான பன்முக கட்டமைப்புகள், போக்குவரத்து செலவை குறைத்து தொழில் போட்டியை அதிகரிக்க உதவும்.
கடந்த 2013-14-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் முதலீட்டு செலவு 5 மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.110 லட்சம் கோடி முதலீடு இலக்கை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் புதிய பொறுப்புகள், புதிய சாத்தியங்கள் மற்றும் திடமான முடிவுகளுக்கு இதுதான் சரியான நேரம்.
கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை நமது வரலாற்றிலேயே காணலாம். சந்திர குப்த மவுரியர் காலத்தில் அமைக்கப்பட்ட உத்தராபாத் என்ற சாலை கட்டுமானத்தை, மன்னர் அசோகர் தொடர்ந்து மேற்கொண்டார். அதன்பின் அதை ஷேர்ஷா சூரி மேம்படுத்தினார். அதைத்தான் ஆங்கிலேயர்கள் ஜி.டி.சாலையாக மாற்றினர். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழரால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது.
முந்தைய அரசுகளின் ஆட்சி காலத்தில் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முதலீட்டு தடைகள் இருந்தன. ஆனால், தற்போதைய ஆட்சியில் நவீன கட்டமைப்புகளுக்கு இதுவரை இல்லாத அளவில் முதலீடு செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையின் சராசரி கட்டுமானத்தை 2014-ம் ஆண்டுக்கு முன் ஒப்பிட்டால், தற்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் ரயில்வே வழித்தடங்கள் 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஓராண்டுக்கு 600 கி.மீ தூரம் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. அது தற்போது 4000 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களின் எண்ணிக்கையும் தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது. கட்ட மைப்பு வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தி. இவ்வாறு பிரதமர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT