Last Updated : 04 Mar, 2023 04:46 AM

 

Published : 04 Mar 2023 04:46 AM
Last Updated : 04 Mar 2023 04:46 AM

ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகன் கைது - லோக் ஆயுக்தா சோதனையில் ரூ.6 கோடி சிக்கியது

பெங்களூருவில் பிரசாந்த் குமார் வீட்டில் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.6 கோடி ரொக்கம். படம்: பிடிஐ

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தாவணக் கெரே மாவட்டம் சென்னைக்கிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பா. இவரது மகன் பிரசாந்த், கர்நாடக அரசின் மைசூரு சாண்டல்சோப் மேம்பாட்டு வாரிய தலைவராக உள்ளார். அந்நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்க தனியார் நிறுவனத்தாரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க நேற்று பெங்களூருவில் உள்ள பிரசாந்த் அலுவலகத்துக்கு வந்தனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது 3 பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்ச பணத்தை கைப்பற்றினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் சில ஆவணங்களை கசக்கி வாயில் போட்டு விழுங்க முயன்ற போது அதிகாரிகள் தடுத்தனர்.

மேலும் அதிகாரிகள் டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது படுக்கை அறையை ரூ.6 கோடியை கைப்பற்றினர். இதேபோல தாவணக்கெரேவில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பாவின் அலுவலகத்தில் ரூ.1.2 கோடி சிக்கியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிரசாந்த்தை நேற்று மாலை கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில் பிரசாந்த் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவில் ஆலோசகராக பணியாற்றிய போதும் லஞ்ச புகாரில் சிக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து கர்நாடக முதல் வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘லோக் ஆயுக்தா அதிகாரிகள் முறைப்படி விசாரணை நடத்திவருகின்றனர். அதில் அரசு தலையிடாது. தவறு செய்தவர்களுக்கு அரசு ஒருபோதும் பாதுகாப்பு அளிக்காது’’என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x