Last Updated : 04 Mar, 2023 04:56 AM

 

Published : 04 Mar 2023 04:56 AM
Last Updated : 04 Mar 2023 04:56 AM

தேசிய அளவில் 16 சதவீதமாக குறைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் காங்கிரஸுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களின் 180 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 8 இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் திரிபுராவில் 3-ம் மேகாலயாவில் 5-ம் பெற்ற காங்கிரஸுக்கு நாகாலாந்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

டெல்லி, சிக்கிம், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் மேற்குவங்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றியால் பூஜ்ஜிய பட்டியலில் இருந்து அம்மாநிலம் தப்பியது. எனினும் இப்பட்டியலில் புதிதாக நாகாலாந்து சேர்ந்துவிட்டது.

பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு சொற்ப எம்எல்ஏக்களே உள்ளனர். 403 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் காங்கிரஸுக்கு 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். உ.பி. உள்ளிட்ட 9 மாநிலங்களில் காங்கிரஸுக்கு 10-க்கும் குறைவான எம்எல்ஏக்களே உள்ளனர்.

காங்கிரஸ் வரலாற்றில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கட்சியின் தலைவரான பிறகு அதன் தாக்கமாக வரும் தேர்தல்களில் பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதன் பிறகும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவு அக்கட்சியினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் காங்கிரஸை விட மிக வேகமாக பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது.

இடையில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால் அது விதிவிலக்காகவே கருதப்படுகிறது.

பிஹாரில் 19, தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் இக்கட்சிக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கை அக்கட்சிக்கானதா அல்லது அக்கட்சி இணைந்துள்ள கூட்டணியின் தலைமைக்கானதா என்ற கேள்வியும் எழுகிறது.

மற்றொரு புள்ளிவிவரப்படி, நாட்டின் அனைத்து மாநிலங் களிலும் மொத்தம் 4,033 எம்எல் ஏக்கள் உள்ளனர். இதில் சுமார் 16 சதவீதம் (658 எம்எல்ஏக்கள்) மட்டுமே காங்கிரஸுக்கு உள்ளனர். 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் 24 சதவீத எம்எல்ஏக்கள் காங்கிரஸிடம் இருந்தனர்.

காங்கிரஸ் முதல்முறையாக இடதுசாரியுடன் இணைந்து திரிபுராவில் போட்டியிட்டும் அங்கு பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க முடியவில்லை.

எனவே இந்த வருடம் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல் மிகவும் முக்கியமனதாகக் கருதப்படுகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைப்பதுடன் மற்ற மாநிலங்களையும் கைப்பற்றினால் மட்டுமே தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

அப்போதுதான் அதன் பலன்காங்கிரஸுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த சவால்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வும், முக்கியத் தலைவரான ராகுலும் சவாலாக ஏற்று களம் இறங்குவார்களா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

திரிபுராவில் 3-ம் மேகாலயாவில் 5-ம் பெற்ற காங்கிரஸுக்கு நாகாலாந்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x