Published : 04 Mar 2023 05:07 AM
Last Updated : 04 Mar 2023 05:07 AM

ராணுவ வீரர்களுக்கு பறக்கும் உடை - இங்கிலாந்து நிறுவனம் செயல் விளக்கம்

ஜெட்பேக் இயந்திரத்தை உடலில் பொருத்தியபடி ஆக்ராவில் உள்ள ஏரி மீதுபறந்து சென்றார் இங்கிலாந் தின் கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங்.

ஆக்ரா: வானத்தில் மனிதர்கள் பறந்து செல்லும் வகையில் ஜெட்பேக் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 3 விதமான ஜெட் இன்ஜின்கள் உள்ளன. ஒன்றை வானில் பறக்கும் நபர் முதுகில் மாட்டிக் கொள்ள வேண்டும். மற்ற இரண்டு ஜெட் இன்ஜின்களை கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வானில் உயரே பறந்து சென்று நினைத்த இடத்தில் தரையிறங்க முடியும். இந்த ஜெட்பேக் இயந்திரங்களை இயக்க காஸ் மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஜெட்பேக் இயந்திரத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஜெட்பேக் இயந்திரம் மூலம் வானில் பறப்பது குறித்த செயல்முறை விளக்கத்தை கிராவிட்டி இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிக், உத்தர பிரதேசம் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவத்தின் வான் பயிற்சி பள்ளியில்(ஏஏடிஎஸ்) அளித்தார். இதன் வீடியோ காட்சியை இந்திய வான்வெளி பாதுகாப்பு செய்திகள் (ஐஏடிஎன்) நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஜெட்பேக் இயந்திரத்தை உடலில் பொருத்தியபடி ஆக்ராவில் உள்ள ஏரி, வயல்வெளிப் பகுதி மற்றும் கட்டிடங்களுக்கு மேலே ரிச்சர்ட் பிரவுனிங் பறந்து காட்டினார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பறந்து சென்று, எதிரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்தும் அவர் விளக்கினார்.

இந்தியா-சீனா இடையேயுள்ள 3,500 கி.மீ. எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த ஜெட்பேக் இயந்திர பரிசோதனை நடந்துள்ளது. 48 ஜெட்பேக் இயந்திரங்களை இந்திய ராணுவம் விரைவில் கொள்முதல் செய்யவுள்ளதாக ஐஏடிஎன் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x