Published : 03 Mar 2023 01:23 PM
Last Updated : 03 Mar 2023 01:23 PM
பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் வீட்டிலிருந்து ரூ.6 கோடி பணத்தை லோக்அயுக்தா போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடக குளியல் மற்றும் துணைதுவைக்கும் சோப்பு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். பின்னர், 30 சதவீத கமிஷனுக்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன்படி, ஒப்பந்தத்தைப் பெற உள்ளவர் ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்அயுக்தா போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய லோக்அயுக்தா போலீசார் அங்கு கணக்கில் வராத ரூ.6 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த மதலை கைது செய்த லோக்அயுக்த போலீசார், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சார யாத்திரையை தொடங்கிவைக்க இன்று கர்நாடகா வந்துள்ளார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட நிகழ்வு அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT