Published : 03 Mar 2023 06:25 AM
Last Updated : 03 Mar 2023 06:25 AM
கோஹிமா: கடந்த 1963-ம் ஆண்டு நாகாலாந்து தனி மாநிலமாக உதயமானது. அந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏராளமான பெண்கள் போட்டியிட்டு உள்ளனர். ஆனால் ஒரு பெண்கூட சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த சூழலில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி (என்டிபிபி ) சார்பில் திமாபூர் 3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜகாலு 14,395 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) வேட்பாளர் ஜுட்டோவுக்கு 12,859 வாக்குகள் கிடைத்தன.
நாகாலாந்தின் திமாபூரை சேர்ந்த ஹெகானி, தலைநகர் டெல்லி மற்றும் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உயர் கல்வி பயின்றுள்ளனர். வழக்கறிஞரான இவர், 'யூத்நெட் நாகலாந்து' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து ஹெகானி கூறியதாவது: எனது தொண்டு நிறுவனம் மூலம் உள்ளூர் மக்களிடம் ஏற்கெனவே நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். அதோடு தேர்தல் பிரச்சாரத்துக்காக அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தேன். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. தொகுதி மக்களின் நலனுக்காக, குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி (என்டிபிபி) சார்பில் மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹுட்டோனு குர்ஸே 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 7,078 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கெனிஜாகோ 7,071 வாக்குகள் பெற்றார். அங்காமி பகுதியில் குர்ஸே ஓட்டல் நடத்தி வருகிறார். அதோடு சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT