Published : 03 Mar 2023 06:04 AM
Last Updated : 03 Mar 2023 06:04 AM
அகர்தலா: திரிபுரா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
கடந்த 1972-ம் ஆண்டு திரிபுரா தனி மாநிலமாக உதயமானது. அந்த மாநிலத்தில் கடந்த 1978 முதல் 1988 வரையும் 1993 முதல் 2018 வரையும் மார்க்சிஸ்ட் ஆட்சி நடத்தியது. கம்யூனிஸ்ட் கோட்டை என்று கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018 தேர்தலில் பாஜக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக மூத்த தலைவர் பிப்லவ் குமார் தேவ் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு பாஜக தலைமை திரிபுரா முதல்வரை மாற்றியது. இதன்படி புதிய முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மாணிக் சாஹா பதவியேற்றார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக, கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி-யும் வேட்பாளரை நிறுத்தியது.
இந்நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. ஐபிஎப்டி-க்கு ஓரிடம் கிடைத்தது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது பாஜக கூட்டணிக்கு 11 இடங்கள் குறைந்துள்ளன.
முதல்வர் மாணிக் சாஹா, டவுண் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 19,586 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆசிஷ் குமார் சாஹாவுக்கு 18,329 வாக்குகள் கிடைத்தன. முதல்வர் மாணிக் சாஹா 1,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திரிபுரா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் களமிறங்கினர். இதில் மார்க்சிஸ்ட் 11 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.
மன்னர் கட்சி 13-ல் வெற்றி: திரிபுராவில் மன்னர் பரம்பரையை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தேப் வர்மா, கடந்த 2019-ல் திப்ரா மோர்த்தா என்ற கட்சியைத் தொடங்கினார். திரிபுரா பழங்குடி மக்களுக்காக தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் போராடி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 13 தொகுதிகளில் திப்ரா மோர்த்தா வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT