Published : 03 Mar 2023 05:36 AM
Last Updated : 03 Mar 2023 05:36 AM
ஹல்த்வானி: காப்பி அடிப்பதை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்தியதற்காக உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை ஹல்த்வானி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா யுவ மோர்சா அமைப்பு நேற்று முன்தினம் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது: கஷ்டப்பட்டு படித்து தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்களின் உரிமைகளை, காப்பி அடிப்பவர்கள் பறித்தால், தேர்வெழுதியவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மிகுந்த வருத்தம் அடைவர். அதனால்தான் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
உங்கள் வெற்றியையாரும் பறித்துவிட முடியாது.போட்டித் தேர்வில் ஏமாற்றுபவர்களை தடுக்க மிக கடுமையான சட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம்.
இந்த சட்டம் தேர்வில் காப்பியடிக்கும் கும்பலை ஒழிக்கும். இனி இளைஞர்கள் நிம்மதியாக இருக்கலாம். இளைஞர்களின் எதிர்காலத்துடன் சிலர் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். உத்தராகண்ட்டில் நடைபெறும் குரூப் சி தேர்வுகளுக்கு நேர்காணல் முறை உடனடியாக ரத்து செய்யப்படும்.
உயர் பதவிகளுக்குத்தான் நேர்காணல் அவசியம். உயர் பதவிகளுக்கு நேர்காணல் மதிப்பெண், மொத்த மதிப்பெண்ணில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது. நேர்காணலில் கலந்து கொள்வோருக்கு 40 சதவீதத்துக்கு குறைவாகவும், 70 சதவீதத்துக்கு அதிகமாகவும் மதிப்பெண் வழங்கினால், அதற்கான காரணத்தை நேர்காணல் நடத்தும் நபர் அல்லது வாரியம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு குறித்து கூட்டத்துக்கு வந்த இளைஞர்கள் கூறுகையில், ‘‘இளைஞர்களின் பிரச்சினையை இளம் முதல்வரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இளைஞர்களின் நலன் கருதி முதல்வர் முடிவுகள் எடுக்கிறார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT