Published : 03 Mar 2023 05:42 AM
Last Updated : 03 Mar 2023 05:42 AM
ஹத்ராஸ்: ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எஞ்சிய 3 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், வேறு சமூகத்தை சேர்ந்த 4 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அப்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பெண்ணின் உடல் அவரது சொந்த கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரின் ஒப்புதலின்றி மாவட்ட நிர்வாகத்தால் தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பெரும் போராட்டங்களும் வெடித்தன. அலகாபாத் உயர் நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சந்தீப் (20), ரவி (35) லவகுஷ் (23), ராமு (26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச்சாட்டுகளும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹத்ராஸ் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளியான சந்தீப்புக்கு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்தது. ரவி,லவகுஷ், ராமு ஆகிய 3 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது.
கடும் எதிர்ப்பு: முக்கிய குற்றவாளி சந்தீப்மீதான பாலியல் வன்கொடுமைகுற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கில் 3 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT