Published : 02 Mar 2023 11:57 PM
Last Updated : 02 Mar 2023 11:57 PM
கொல்கத்தா: காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு வாக்களிப்பதுபோன்று என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.
ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதை ஒற்றை இலக்காக திட்டமிட்டு நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். மாநிலங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குதான். இதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் சொல்கிறேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சிலர் பேசுவதும் கரைசேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பதும் சரிவராது" என்று அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, "திரிணாமூல் காங்கிரஸ் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. யாருடனும் நட்புகொள்ள விரும்பவில்லை. மக்களின் ஆதரவோடு நாங்கள் தனியாக போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க விரும்புவோர் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு வாக்களிப்பதாகும். இது இன்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT