Published : 02 Mar 2023 05:40 PM
Last Updated : 02 Mar 2023 05:40 PM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பாட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஷாம் யாதவ் என்ற இளைஞர் அலுவலக பணி முடிந்து வழக்கமாக விளையாடும் அரங்கில் பாட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு தரையில் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் அருகிலுள்ள காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, ஹைதராபாத்தில் நிர்மல் மாவட்டத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் இளைஞர் நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியான நிலையில், அதே நகரில் இளைஞர் ஒருவர் விளையாடும்போது மாராடைப்பால் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவுக்கு பிறகு சமீப நாட்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, தீவிர கோவிட் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்குக் கோவிட் நோயின் தீவிரத் தாக்கத்தினால் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்படுவது புலனாகிறது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிராக உடலின் எதிர்ப்புசக்தி செய்யும் போரின் விளைவாக, இதயத்தின் தசைகளும் காயத்துக்கு உள்ளாகக்கூடும். மேலும், ரத்த நாளங்களுக்குள்ளே ரத்தக் கட்டிகள் உருவாகும் தன்மை அதிகரித்து, அதனால் இதய ரத்த நாள அடைப்பும் மூளை ரத்த நாள அடைப்பும் கால்களில் ஆழ்சிரை ரத்த நாள அடைப்பும் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்கின்றன ஆய்வுகள். கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு எட்டு மாதங்கள் வரை இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT