Published : 02 Mar 2023 04:09 PM
Last Updated : 02 Mar 2023 04:09 PM
அகர்டலா (திரிபுரா): திப்ரா மோதாவின் 'கிரேட்டர் திப்ராலேண்ட்' கோரிக்கையைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் என திரிபுரா மாநில பாஜக தெரிவித்துள்ளது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கோட்டையை திப்ரா மோதா கட்சி தகர்த்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்.16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறன. தற்போதைய நிலவரப்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி 34 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மாநிலக் கட்சியான ப்ரடோய்ட் மணிக்யா டெப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி 12 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த திரிபுரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரபோர்தி கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்து கூறியது போல மாநிலத்தில் அடுத்தும் நாங்கள் ஆட்சி அமைக்க இருக்கிறோம். இங்குள்ள நிலைமையை கண்காணிக்க பனிந்தரநாத் சர்மா, சம்பித் பத்ரா என இரண்டு மத்திய தலைவர்கள் இங்கு உள்ளனர் இன்று மாலைக்குள் மேலும் பல தலைவர்கள் வர இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், திப்ரா மோதா கட்சியின் ஆதரவினைப் பெறுவது தொடர்பாக கூறும்போது, “அவர்களின் கிரேட்டர் திப்ராலேண்ட் கோரிக்கையைத் தவிர ஏனையவற்றை ஏற்றுக்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது” என்றார்.
திப்ரா மோதா கட்சியை கடந்த 2019-ம் ஆண்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்த ப்ரச்யோத் பிக்ராம் மணிக்யா டெப் பர்மா தொடங்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது., 2021ம் ஆண்டு திரிபுராவின் பழங்குடியினர் பகுதிகளில் நடந்த கவுன்சில் தேர்தல்களில் வென்று தனது வருகை அழுத்தமாக பதிவு செய்தார். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின் போது, பாஜக அதன் கூட்டணி கட்சியான, திரிபுரா மக்கள் முன்னணிக்கு 10 பழங்குடியினர் தொகுதிகளை ஒதுக்கியது. இதில் 8 அக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டில் சிபிஐ (எம்) வெற்றி பெற்றது.
இந்த முறை திப்ரா மோதா கட்சி மொத்தமுள்ள 20 பழங்குடியின தொகுதிகளில் 12 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. இதன்மூலம் திரிபுரா மக்கள் முன்னணி கட்சியை பின்னுக்கு தள்ளி, பிரதான பழங்குடியின கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கு அக்கட்சியின் கிரேட்டர் திப்ராலேண்ட் கோரிக்கை முக்கியக் காரணம். இந்த வெற்றியின் மூலம், பழங்குடியின பகுதிகள் சிபிஐ(எம்) கட்சியின் கோட்டை என்ற நிலையையும் திப்ரா மோதா மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT