Published : 02 Mar 2023 08:34 AM
Last Updated : 02 Mar 2023 08:34 AM
புதுடெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் இதே கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது. திரிபுராவின் முன்னாள் ஆளும் கட்சிகளான சிபிஎம் மற்றும் காங்கிரஸ், இம்முறை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருந்தது. எனினும், திரிபுராவில் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி இருப்பதால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு உண்மையாகுமா பொய்க்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
நாகாலாந்து: மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து, 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், 85.9 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. பாஜக 20 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தங்கள் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் நெய்பியூ ரியோ நம்பிக்கை தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இந்த கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கணித்துள்ளன. தற்போது வாக்கு எண்ணும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
மேகாலயா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில், கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகின. அவற்றை எண்ணும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இங்கு தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக கான்ராட் கே. சங்மா உள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது. எனினும், முடிவு என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT