Published : 02 Mar 2023 04:22 AM
Last Updated : 02 Mar 2023 04:22 AM
பெங்களூரு: நாட்டில், குறிப்பாக கர்நாடகாவில் பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியதில் முன்னோடியாக திகழ்ந்தவரும் புகழ்பெற்ற கல்வியாளரும் தொழிலதிபருமான எம்.எஸ்.ராமையாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று பேசியதாவது:
என்னுடைய வலியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார். அரசியல் நிர்ணய சபையில் அது, மூன்று ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது. என்றாலும் அரசியல் நிர்ணய சபைக்கு எவ்வித தடங்கலும் அல்லது இடையூறும் ஏற்படவில்லை. எவரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பவில்லை அல்லது பதாகைகளை காட்டவில்லை.
மாநிலங்களவையின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கோடிக்கணக்கான பொதுப் பணம் செலவிடப்படுகிறது. அரசையும் நிர்வாகத்தையும் பொறுப்பேற்க வைக்கும் தளம் மாநிலங்களவை ஆகும். ஆனால் அங்கு குழப்பங்களும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. அதைவிட கவலை என்னவென்றால் அதுபற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்பதேயாகும். எனவே நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பொதுக் கருத்தை உருவாக்கிட வெகுஜன இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இதற்கு நீங்கள் அனைத்து ஊடகத்தையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெகதீப் தன்கர் வலியுறுத்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT