Published : 01 Mar 2023 06:39 PM
Last Updated : 01 Mar 2023 06:39 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது என்றும், பிரதமராவதில் என்ன தவறு என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இது ஒரு அற்புதமான தொடக்கம். நாட்டின் ஒற்றுமைக்காக ஸ்டாலின் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்; திமுக அளித்திருக்கிறது. வேற்றுமையில்தான் நாட்டின் ஒற்றுமை இருக்கிறது. வேற்றுமையை பாதுகாப்பதன் மூலம் ஒற்றுமையை பாதுகாக்க முடியும்'' என தெரிவித்தார்.
அப்போது, ஸ்டாலின் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, ''அவர் ஏன் பிரதமராகக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?'' எனக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, ''எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT