Published : 01 Mar 2023 02:04 PM
Last Updated : 01 Mar 2023 02:04 PM

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு | ''அதிக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்'' - வெளியுறவுத் துறை

புதுடெல்லி: ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்க உள்ள நிலையில், இதில் முன் எப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக இந்திய வெளியுறுவுத் துறை தெரிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா ஏற்றது. இதையடுத்து, ஜி20 கூட்டமைப்பு சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்குகிறது.

இந்த மாநாடு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் க்வத்ரா, ''இதுவரை நடந்த ஜி20 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கப் போகிறது. உலகமே ஒரு குடும்பம் எனும் இந்திய மரபுவழி சிந்தனையை கருப்பொருளாகக் கொண்டு இந்த மாநாடு கூட இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அமிர்த காலம் இது என்பதால், அது சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் 40 வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா, பிரேசில், மொரிஷியஸ், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தியா வந்துள்ளனர். முதல் நாளான இன்று நடைபெற உள்ள முதல் அமர்வில், உணவு பாதுகாப்பு, எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாளை நடைபெற உள்ள மாநாட்டின் 2 அமர்வுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்க இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x