Published : 01 Mar 2023 06:42 AM
Last Updated : 01 Mar 2023 06:42 AM
திப்ருகர்: உலகின் மிக நீளமான நதிவழி சொகுசு கப்பல் என்று அழைக்கப்படும் எம்.வி. கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் நேற்று திப்ருகரில் நிறைவடைந்தது. திப்ருகர் வந்தடைந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘எம்.வி. கங்கா விலாஸ்' என்கிற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு கப்பல், நதி வழியாக இயக்கப்படும் உலகின் நீளமான சொகுசு கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கியது. இந்த சொகுசு கப்பலின் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இது புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காஜிரங்கா தேசியப்பூங்கா, வங்கதேசத்தின் டாக்கா வழியாக அசாமில் உள்ள திப்ருகரில் பயணத்தை முடிக்கும்வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்படி இந்த சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு நேற்று மாலை வந்தடைந்தது. திப்ருகருக்கு வந்த சொகுசு கப்பலுக்கு, மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை சர்வானந்த சோனோவால் தலைமையில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கப்பலில் பயணம் செய்த அனைவருக்கும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பயணிகள் இந்தக் கப்பலில் பயணித்தனர்.
இவர்களுக்கு சேவை செய்ய 40 கப்பல் பணியாளர்களும் இந்தகப்பலில் பயணித்தனர். இந்த சொகுசுகப்பல் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதனால் உலகின் மிகநீளமான நதிவழிக் கப்பல் என்ற பெயரை இந்தக் கப்பல் பெற்றுள்ளது. இதில் பயணம் செய்ய அடுத்த 2 ஆண்டுகளுக்குமுன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.வி. கங்கா விலாஸ் கப்பல் தனது முதல் பயணத்தை திப்ருகரில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதற்கான வரவேற்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் பயணிக்க ஒரு நாளைக்கு ஒரு பயணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு பயணி இந்தக் கப்பலில் 40 நாள் பயணம் செய்ய சுமார் ரூ.20 லட்சம் வரை செலவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT