Published : 01 Mar 2023 05:16 AM
Last Updated : 01 Mar 2023 05:16 AM
பெங்களூரு: கர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா கடந்த மாதம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைகேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ரோஹினி சிந்தூரி, தலைமை செயலரிடம் ரூபா மீது பதில் புகார் தெரிவித்தார்.
பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மோதலால் சர்ச்சை ஏற்பட்டதால் கர்நாடக அரசு, ரூபா, ரோஹினி, ரூபாவின் கணவரும் நில அளவியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையருமான மோனிஷ் மோத்கில் ஆகியோரை பணியிட மாற்றம் செய்தது. இதனிடையே ரோஹினி சிந்தூரி தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ரூபாவிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘வரும் மார்ச் 7ம் தேதி வரை ரூபா சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ, ஊடகங்கள் வாயிலாகவோ ரோஹினி சிந்தூரி குறித்து அவதூறான செய்திகளை வெளியிடக் கூடாது'' என உத்தரவிட்டது. இருப்பினும் ரூபா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரோஹினி சிந்தூரிக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்தார். இதையடுத்து ரோஹினி சிந்தூரி இதுகுறித்து நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முறையிட்டார்.
அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில், ‘‘ரோஹினி சிந்தூரி குறித்த தகவல்களை ரூபா வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும், ரூபா அதனை மீறியுள்ளார். தனதுஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூட ரோஹினி சிந்தூரிக்கு எதிரான செய்தியை பகிர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறிய ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''என வலியுறுத்தினார்.
அதற்கு நீதிபதி, இவ்வழக்கில் வரும் 3-ம் தேதிக்குள் ரூபா பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT